Monday, November 29, 2010

ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் கவிதைகள்

கவியெழுத  ஆரம்பித்த
காலம் தொட்டு
காத்திருந்து எழுதியதில்லை
கவிதை பாட்டு......

காலமெல்லாம் நிற்கும்படி
சீர்களைப் போட்டு
கவியெழுதப் போகின்றேன்
உங்கள் கால்கள் தொட்டு ......

வாக்கொன்று கொடுத்ததனால்
வார்த்தையிங்கு தொடுக்கவில்லை
வாழ்த்தொன்று வாங்குவதற்கு
வாய்ப்பன்று கொடுக்கவில்லை .....

ஆசைக்கு நாள்குறிச்சு
அன்னைக்கு சேர்ந்தகத
மீசை நரைச்ச பின்னும்
மிச்சகத பேசுதுங்க ........

இருபதிலே மணமுடிக்க வாய்ப்பு
இல்லை பலருக்கு
அறுபதிலே மணமுடிக்க நூறில்
ஆறுபேருக்கு வாய்க்குமோ?

பெத்தபுள்ள  தூக்கி
பேருவச்ச காலம்போயி
பேரப்புள்ள தூக்கி
பேருகேட்கும் நாள் வந்ததே!

ஓடி உழைச்சதில
உடம்பு தேஞ்சிருந்தாலும்
உறவுகள பாத்தவுடன்
உசிரு துடிக்கிறதே .....

இத்தன வருசத்தில்
எத்தன ரகசியங்கள்
கண்ணால பேசிகிட்டு
கரைஞ்சு  போயிருக்கும் ...

நாளெல்லாம் சொன்னாலும்
நாள் குறிச்சு  சொன்னாலும்
நலுங்கு வச்ச நாள
மறக்க மனசுல இடமேது .....

இருமனமே இருமணம் தானென்று
இருந்துவிடப் போகின்றீர்
மூன்றுமகன் இருப்பதனால்
முப்பெரும் விழா இருக்கின்றது .....








 

Wednesday, October 27, 2010

காதல் தீபாவளி

ஒரு
பூக்கடை
வெடிகடைக்கு போகிறது.
நீ
வெடி வாங்கப்போனதை
நான்
வேறுஎப்படி சொல்லமுடியும் ...

நெருப்பையும்
சிரிப்பையும்
வைத்துக்கொண்டு
நீ
கொளுத்திப்போட்ட பட்டாசுகளில்
முதலில் வெடித்தது நான்தான்..............

தீபாவளி
வந்துவிட்டது
வழக்கம்போல்
நீ
எச்சில் செய்த
பலகாரத்தை மட்டும்
எனக்கனுப்பு
அதுபோதும் எனக்கு ..............

பண்டிகை அன்று
நீ
கோவிலுக்கு போனால்
பாவம் கடவுள்
எல்லா வகையிலும்
நிராகரிக்கப்படுகிறார்..


கடைசியில்
கம்பிமத்தாப்பு
புஷ்வானம் கொளுத்தி
பூரித்து சிரிக்கையில்
என்
அடுத்த வருடத்திற்கான
தீபாவளி கனவுகள்
அங்கேயே தொடங்குகின்றன ................

Wednesday, September 1, 2010

தீராத பொழுதுகள்

கனவில்
உன்னோடு பேசுவதை
நினைத்து நினைத்தே
கழிகிறது
பகல் பொழுது ..........

வாடாத பூக்கள் ...

உனக்காய் எழுதிய
முதல் கவிதை
எந்த திருத்தமுமின்றி
அப்படியே இருக்கிறது
உன்னை போல அழகாய்...............

எது கவிதை

ஒன்றுக்கு
இரண்டுமுறை
இரண்டுக்கு
மூன்றுமுறை
மூன்றுக்கு
நான்குமுறை படித்தும்
நகம்கடிக்க செய்தால்
அதுதான் கவிதை .....

இந்த
நகக்கடி கவிதைகள்
கொசுகடியை காட்டிலும்
அதிகம் கடிக்கிறது ......

அறிவுஜீவிகளே
உங்களை
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

எங்கள்
பாமர கூட்டத்திற்கு
தெளிவுரை தேவைப்படுகிறது

உங்கள் தெளிவுரைக்கு
மீண்டும் ஒரு விளக்கவுரை
தேவைபடாதென்று நம்புகின்றேன் ....

Monday, June 14, 2010

இது புரியாத கவிதை அல்ல...புது கவிதை

அழகன்
பெற்றெடுத்த
ஒரு
அழகி ....

இல்லை
இல்லை

அழகி
பெற்றெடுத்த
ஒரு
பேரழகி ...

இங்கு
ஒரு
கேள்வி எழலாம்?

அழகியா
இல்லை
பேரழகியா ....

இளவழகன்
தூக்கி
கொஞ்சுகிறபோது
அழகி ...

இளவழகன் மனைவி
தூக்கி
கொஞ்சுகிறபோது
பேரழகி ...

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு புத்தகம்
வரிக்கு வரி
வாசியுங்கள் ......

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு வானம்
உங்கள்
சிறகுகளை
தேடி கண்டுபிடியுங்கள் .......

குழந்தையோடு
விளையாடுகிறபோது மட்டும்
யாருக்கும்
வியர்ப்பதில்லை
முடிந்தளவு விளையாடுங்கள் .....



உங்கள்
குழந்தை நிலவு
ரசித்து போன
நட்சத்திரங்களில்
நானும் ஒருவன் ....

ஒரு
குழந்தைக்கான கவிதை
வார்த்தைகளையும் தாண்டி
ஏதோ
ஒன்றில் தொடங்கி
ஏதோ
ஒன்றில் முடிகிறது ...

அது
எதுவாய்
வேண்டுமானாலும்
இருக்கலாம் ...

தெரிந்தால்
சொல்லுங்கள்
தெரியாமல் இருந்தால்
உங்கள் குழந்தை
உங்களுக்கு
சொல்லிக்கொடுக்கும் ...........

அன்புடன்
அசோக் .......

Sunday, June 13, 2010

காதல் கவியரங்கம்

எனக்கு
அன்னம் இட்டது
திரை அரங்கம்
ஆளாக்கி விட்டது
கவி அரங்கம்

எதை
பாடசொன்னாலும்
காதல் பாடுகிறவனை
காதலை
பாட சொன்னால் ?

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
ஆனால்
ஒரு சிலர் தான்
கவிதை எழுதுகிறார்கள்

முதல்
காதலும்
முதல்
கவிதையும்
ஒருவன்
தனக்கு தானே
எழுதிக்கொள்ளுகின்ற
கடிதங்கள்

நிறையபேர்
வாழ்கையில்
கடிதங்கள்
பிரிக்கபடாமலே
கிழிக்கப்படுகின்றன ............

காதல்
இசை
காது உள்ளவர்கள்
கேட்டு மகிழ்கிறார்கள் ....

காதல்
மொழி
வாய் இருப்பவர்கள்
பேசி சிரிக்கிறார்கள் ......

காதல்
இரவு
உன்னை எழுப்பிவிட்டு
அது
தூங்கி போய்விடும் ......

காதல்
நிலவு
கவிதைகளை
கடன் வாங்கும் .....

கல்லறை அதிசயமாய்
இருப்பதனால் தான்
என்னவோ
இங்கே தான்
காதலுக்கு அதிக
கல்லறைகள்
கட்டப்படுகின்றன ....